Savithri in Tamil | Actress Savithri History

Savithri in Tamil | Actress Savithri History

Savithri in Tamil:

இரண்டரை மணி நேரம் மட்டுமே அடங்கிய சினிமாவிற்குள் நமது நடிகையர் திலகத்தை ‘முற்றிலுமாகக’ காட்சிப்படுத்திவிட இயலாததுதான்! ஏனென்றால்,  அவர் அப்படித்தான்! கட்டுரைக்கும் இது பொருந்தும். இருப்பினும், சாவித்திரி என்றொரு நடிப்பு சமுத்திரத்தில் இருந்து, நாம் ஒரு உள்ளங்கை அளவிற்க்கு எடுத்து இப்பதிவினில் தெளித்திருக்கிறோம்.

Savithri in Tamil

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியாவின் திரையுலகம் முற்றிலுமே ஆட்சி செய்தவர் நடிகை சாவித்ரி. இந்திய திரையுலகமே நடிகை சாவித்ரியை வியந்து பார்த்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரண்டு நடிப்பு ராஜாக்கள் தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. கருப்பு வெள்ளை திரைப்பட காலம் எனப்படும் 60, 70களின் அந்தக் காலக்கட்டத்தில் கலை நடிகைகளுக்கும் சினிமாவில் கதாநாயகர்களுக்கு சரிசமமாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் நடிகையர் திலகமாக தன் அழகாலும், திறமையாலும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சாவித்திரி, தன்னுடைய இறுதி காலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இறந்த கதை பெரும் துயரம். 

நடிகையர் திலகம், இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். சாவித்திரியின் இயற்பெயர் சசிகலாவாணி. சிறு வயதிலேயே நடனத்தில் ஆசை கொண்டவருக்கு மேடை மற்றும் நாடக கதாபாத்திர வாய்ப்புகளும் வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புத் தேடி வந்தவரை, ‘நீ எல்லாம் ஏன்மா நடிக்க வந்த?’ என அசிங்கப்படுத்தி அனுப்பிய ஜெமினி கணேசன் தான் பிற்காலத்தில் அவருக்கு கணவராய் வந்தார் என்பது சுவாரஸ்யம். 1952ம் வருடம் ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற திரைப்படம் மூலம் நடிகை சாவித்ரி திரையில் தோன்றினார்.

Savithri in Tamil | களங்கம் கற்பித்துவிட முடியாது!

1964-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் டைரக்ஷனில் வெளிவந்தது, நடிகையர் திலகம் நடித்த “கை கொடுத்த தெய்வம்” எனும் திரைப்படம். அந்தப் படத்தில் அவருக்கு வெகுளிப்பெண் கதாபாத்திரம். சிவாஜி அவரை வியந்து பாடுவது போல காட்சி.    சாவித்திரியின் குணாதிசயத்தை உணர்ந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய சிந்தனையில், பாடலின் வரிகள் தானாக வந்து விழுந்தன. 

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, 
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ 
பார்வையிலே குமரியம்மா  பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

கண்ணென்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ 
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ 
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம் 
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்

 ஆமாம்.  தனது திரைப்பட வாழ்க்கையில் சாவித்திரி நல்லது பண்ணியிருக்கலாம் அல்லது கெட்டதும் செய்திருக்கலாம். அந்த ஒரு குறிப்பிட்ட செயலை மட்டுமே வைத்து,  சினிமாவோ, கட்டுரையோ,  சாவித்திரிக்கு முற்றிலும் களங்கம் கற்பித்துவிட இயலாது. ஏனென்றால்,  அவர்   ‘பாலினும் வெண்மை; பனியிலும் மென்மை’ ஆனவர். 

 Savithri in Tamil | நடிகர் திலகமே வியந்த நடிகையர் திலகம்!
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சாவித்திரியின் உடலமைப்பில் மாறுபாட்டைக் காணலாம். மிஸ்ஸியம்மா சாவித்திரி மிகவும் அழகானவர்; பாசமலர் சாவித்திரி வேடத்தில் அவர் மற்றொரு அழகு.  திருவருட்செல்வரில் குண்டாயிருந்த சாவித்திரியும், தனது இறுதி  காலத்தில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்த சாவித்திரியும் வேறுபட்ட தோற்றங்களைக் பிரதிபலித்தார்கள். திரை வாய்ப்புக்கள் நிறைய வந்ததால், சாவித்திரியை மிஞ்ச சரோஜாதேவியால் முடிந்தது. ஆனால், நடிகையர் திலகத்தின் கலை திறமையான நடிப்பை மட்டும் சரோஜாதேவியால் நெருங்க முடிந்ததில்லை.

 தெலுங்குப் பெண்ணான சாவித்திரியின் தமிழ் உச்சரிப்பு அலாதியானது. 1953-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் ‘பெம்புடு கொடுகு’ எனப்படும்  தெலுங்குப்படம் வெளியானது. அவர் பேசி நடித்த தெலுங்கை ‘பயங்கரம்’ என கலாய்த்தது ஒரு பத்திரிகை. பின்னாளில், நடிகர் திலகமே, நடிகையர் திலகம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “சகோதரி சாவித்திரியுடன் நடிக்கும்போது, நான் சற்று எச்சரிக்கையாகத்தான் நடிப்பேன். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் கண்டிப்பாக நடிப்புப் போட்டி இருக்கும்.” என்று சொல்கிறார். சரஸ்வதி சபதத்தில் சாவித்திரிதான் சரஸ்வதி. அப்போது கர்ப்பமாக இருந்தார். மேக்-அப் எனப்படும் தனது ஒப்பணைகளை முடித்து, ஆடை அலங்காரத்துடன் ஸ்டுடியோவுக்குள் சாவித்திரி வருகை தரும் போது, தீபாராதனை காட்டினார்கள். அவரை கலைமகளாகவே பாவித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.   ஏனென்றால், தோற்றத்திலும் நடிப்பிலும் அப்படி ஒரு தெய்வாம்சம்! வறுமை வறுத்தெடுத்த நிலையிலும்கூட,  தன் ரசிகர் ஒருவரின் அவசரத் தேவைக்காக, தான் பெற்ற ஷீல்டுகளையெல்லாம் சேட்டு கடையில்  விற்று ரூ.10000 தந்ததாகட்டும்,  விலை உயர்ந்த பட்டுச்சேலையை விற்று, டிரைவரின் மகள் திருமணத்துக்கு உதவியதாகட்டும், அத்தனை தயாள குணம்! இடதுகைப் பழக்கம் உள்ள சாவித்திரியை வள்ளல் என்று சொன்னால் மிகையாகாது. 

Savithri in Tamil | உறவை உதறவைத்த  ‘ப்ளே-பாய்’ ஜெமினி!
1965-ல் மிகச்சிறந்த திரைத்துரை ஜோடியைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது ஒரு சமூகநல குழு. அப்போது நடந்த அந்த போட்டியில் சிறந்த ஜோடிக்கான முதல் பரிசைப் பெற்றது ஜெமினி – சாவித்திரி ஜோடி. இருப்பினும், வாழ்வினில் சாவித்திரி தோல்வி அடைந்தார் அதற்கு காரணமாகச் கூறப்படுவது   ஜெமினியின் ‘ப்ளே பாய்’ விளையாட்டுகளே!  

தனது 12 வயதினில் சாவித்திரி சினிமா வாய்ப்பு கேட்டு சென்னை வந்தபோது முதலில் ஜெமினியை சந்தித்தார். 16 வயதில் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த வயதில்தான்,  32 வயது  ஜெமினியோடு  அவர் பழக ஆரம்பித்தார். தன்னுடைய 19-வது வயதில் பாப்ஜி என்ற அலமேலுவை கல்யாணம் செய்து, குழந்தைகளோடு வாழ்ந்த ஜெமினி, தன்னுடைய 31-வது வயதினில் புஷ்பவள்ளி எனப்படும் நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது. பாப்ஜி,  புஷ்பவள்ளி போன்ற இரு பெண்களிடம் திருப்தி இல்லாத மனநிலையில், ஜெமினியின் மூன்றாவது விருப்பமாக இருந்தார் சாவித்திரி. பழக ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கடந்துதான்,  ஜெமினி-சாவித்திரி உறவு வெளிஉலகத்துக்கு தெரிந்தது. இரண்டாவது மனைவியாக இருந்தாலும்,  ‘என் இடத்தில் இன்னொருத்தியா?’ என்று சாவித்திரி மீது கடும் கோபம் கொண்டார் புஷ்பவள்ளி. காரை ஏற்றிக் கொல்லவும் முயற்சித்தார். ஜெமினியுடனான சாவித்திரியின் வாழ்க்கை என்பது 17 வருடங்கள்தான். 1969-ல் இருவரும் பிரிந்தனர்.  இதற்கெல்லாம் காரணம் ஜெமினியின் அலைபாயும் மனதுதான். ஜெமினி தனது மனைவி, குழந்தை, குடும்பம்  என அனைத்துமே கொண்டிருந்த போதும், தன்னுடைய 70-வது அகவையில், செக்ரட்டரி ஜூலியானவையும் கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் செய்ததை என்னவென்று கூறுவது? இவை எல்லாவற்றையும்  லீலைகளாகப் கண்ட இந்த திரையுலகம், ‘காதல் மன்னன்’ என்ற பட்டம்  தந்தது. 

Savithri in Tamil | சரிவுக்குக் காரணம் சந்திரபாபுவும்தான்!
தான் தேடிக்கொண்ட வாழ்க்கைத்துணை சரியில்லாதபோது,  சாவித்திரி என்ன செய்வார் பாவம்! ஒருமுறை இந்தோனேசியா சென்றார் சாவித்திரி. அங்கு சாப்பாடு விருந்தளித்த அந்த நாட்டின் அதிபரான சுகர்தோ,  மது அருந்தும்படி கேட்டு கொண்டார். அதிபரின் விருப்பம் ஆயிற்றே! மது அருந்தினார் சாவித்திரி. ஜெமினியைப் பிரிந்த காலத்தில், சந்திரபாபுவின் நட்பு சாவித்திரிக்கு ஆறுதலாக இருந்தது. சாவித்திரி சந்திரபாவுக்கு ரூ.25000 தந்து உதவியதன் மூலம்,  “மாடி வீட்டு ஏழை” திரைப்படத்தில் நடிப்பதற்கு, எம்.ஜி.ஆருக்கு முன்பணம் தர சந்திரபாபுவால் முடிந்தது.  ‘உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட’ என்று சொல்வது,  சாவித்திரி – சந்திரபாபு காரியத்தில் முற்றிலும் பொருத்தமாக இருந்தது. மாலை நேரத்தில், சாவித்திரி மது அருந்துவதற்கு ‘கம்பெனி’ கொடுப்பவராக இருந்தார் சந்திரபாபு. இப்படித்தான் மதுவுக்கு அடிமையாகிப் போனார் சாவித்திரி.  இரண்டு பேருமே திரைப்படம் எடுத்து, நஷ்டமடைந்து, குடித்து, தனது வாழ்க்கையைத் தொலைத்தார்கள். 

Savithri in Tamil | கவர்ச்சி காட்ட வைத்த மலையாளப்பட உலகம்!
ஒரு சமயம் தன்னைச் சார்ந்தவர்களுக்கு வாரிக் கொடுத்த சாவித்திரி நடிகை பின்நாட்களில் தனது வீடு, வாசல் இழந்து,  வறுமையின் கோரப் பார்வையில் சிக்கித் தவித்தார். அவருடைய பணத்தேவையை அறிந்து கொண்ட மலையாள திரைப்பட உலகம், நைச்சியமாகப் அவரைப் பயன்படுத்திக் கொண்டது. சுழி என்றொரு மலையாள சினிமா. அதில் சுஜாதாவின் அம்மாவாக நடித்தார் சாவித்திரி. குடிகாரி கதாபாத்திரம். தமிழ் திரையுலகம் தேவதை என்று பார்த்த  சாவித்திரியை, இரவு உடையினில், போதையின் உச்சத்தில், விரகதாபத்தை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் காட்டினர்.  வறுமையின் கோரத்தால், தன் கலைப் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் அறிந்தே நடித்தார் சாவித்திரி.   தமிழகத்திலும் அந்தத் திரைப்படத்தை வெளியிட்டனர். மற்ற கதாநாயகிகளைப் போல் அல்ல! தமிழ் ரசிகர்கள் அனைவருமே சாவித்திரியை தமது குடும்பத்தில் ஒரு சகோதரியாக  பார்த்தனர்.  தனது முதுமையான காலத்தில் சாவித்திரி இவ்வாறு கவர்ச்சி தோற்றத்தில் நடித்ததை அறிந்து, மனதுக்குள் எரிமலையாய் குமுறினார்கள் அவரது ரசிகர்கள். 

Savithri in Tamil | எம்.ஜி.ஆரின் அறிவுரையைக் கேட்கவில்லை!
எம்.ஜி.ஆர். ஒரு கொடைவள்ளல் அல்லவா! தன்னுடன் கூடமே நடித்த சாவித்திரிக்கு சரியான முறையில் ஏன் உதவ முன்வரவில்லை என்று  தோன்றும். குடிப்பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுப்பவர் எம்.ஜி.ஆர். ஆனாலும், ஒருகட்டத்தில் சாவித்திரிக்கு உதவினார். தனது பணத்தை செலவழித்து சொந்தப் திரைப்படம் எடுத்து தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் நஷ்டமடைந்த நிலையில், எம்.ஜி.ஆரின் சென்னையிலுள்ள அவருடைய மாம்பலம் அலுவலகத்துக்கு வந்து அவரை பார்த்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் “உடம்பை கவனித்துக்கொள்” என்று அறிவுரை கூறி, 1 லட்சத்தை ரூபாய் பணத்தை ஒரு குட்டிச்சாக்கினில் கொடுத்தார். வசிப்பதற்கு வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.  அந்தப் பணத்தை சாவித்திரி எதற்காகச் செலவழிப்பார் என்பதை எம்.ஜி.ஆர். அறியாதவர் அல்ல. சாவித்திரியும் எம்.ஜி.ஆர். செய்த உதவியை நல்லவிதத்தில் பயன்படுத்தவில்லை.

மரணம் மட்டுமே தேவை! 
சாவித்திரரி தன்னுடைய கொடூர நோயின் பிடியில் இருந்தபோது, தன்னுடன் யாராவது பேசுவார்களா என ஏங்கித் குமுறினார். தன்னுடைய சொந்தங்கள் நண்பர்கள் என யாருமே தன்னை பார்க்க வராத அவல நிலையில், தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ரிக்ஷாக்காரர்களைத் தேடிப் போய் பேசினார். சாலையோரத்தில் அமர்ந்து குடித்தார். பணத்துக்காகப் பலரிடமும் கை நீட்டினார். தன் பிள்ளைகளைக் கூட விரட்டியடித்தார். ஏனெனில், அந்த நேரம் அவருக்கு மானம், பாசம் என்று எதிலுமே ஒரு பிடிப்பு இல்லை. மரணம் மட்டுமே தேவையாக இருந்தது. அதற்காகவே காத்திருந்தார்.
அஞ்சலி செலுத்துவதற்கு அனைவரும் வந்தார்கள்!
அன்றும், இன்றும், என்றும் ரசிக மனங்களை ஆக்கிரமிக்கும் அசாத்திய நடிப்புத் திறமையைத் தன்னகத்தே கொண்டவராக இருந்த சாவித்திரி, 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார்.  1981ம் ஆண்டு, டிசம்பர் 25-ஆம் நாள், சென்னை லேடி வெலிங்டன் மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்தது. தன்னுடைய எந்த வீட்டிற்கு முதன் முதலில் அடைக்கலம் கேட்டு நடு இரவில் வந்தாரோ, அதே நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்துதான் நடிகையர் திலகத்தின் கடைசி பயணம் தொடங்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ஜெமினி. ஜெமினியின் மனைவிகளான பாப்ஜியு மற்றும் புஷ்பவள்ளி அவரது உடலைப் பார்த்து அழுதனர். அன்றைய நிலைமையில் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மற்றும் சிவாஜி , தெலுங்கு நடிகர்களான என்.டி.ஆர்., என அனைத்து திரைஉலகமே ஒன்று சேர்ந்து திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. அவர் எப்பொழுதுமே, நடிகைகளுக்கு எல்லாம் மகா நடிகை என சாவித்திரியை,  வரலாறு மிகவும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. 

Share the knowledge