ANGALA PARAMESHWARI IN TAMIL | தொட்டியம் அங்காளம்மன்
ANGALA PARAMESHWARI IN TAMIL | அம்மன் திருவரலாறு:
ஒரு முறை நான்கு யுகங்களில் ஒன்றான சதுர்யுகத்தில் ஆதி யுகமான கிரேதாயுகத்திற்கு முன்னால் சரஸ்வதி தேவியின் சாபத்தால் அய்யன் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தை போக்கும் நோக்கத்தில், லோகத்தினுடைய உயிர்ளுக்கு அருள்பாலிக்கும் காரணத்தினாலும் அன்னை பார்வதி தேவியானவள் அங்காள பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்து எழுந்தருளிய தெய்வீக தலம் தான் மேல்மலையனூர் கோவில் ஆகும். இவ்வாறான கருணை மற்றும் இரக்கம் போன்ற குணங்களைக் கொண்ட அன்னையான அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் கோவில்கள் உள்ளன.

ANGALA PARAMESHWARI IN TAMIL |அன்னையின் கதை :
தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றார் பிரம்மன். ஒரு சமயம் பிரம்ம தேவன் கயிலாயம் சென்ற போது பார்வதி தேவியார் அவரைத் தொலைவில் இருந்து பார்த்தார். சிவபெருமான்தான் வருகிறார் எனத் தவறாக நினைத்தாள். அவருக்கு பாத பூஜை செய்தாள் பார்வதி. அந்த சமயம் பார்த்து சிவபெருமான் கையிலாயத்திற்கு வரவே பார்வதி தேவிக்கு குழப்பம் ஏற்பட்டது. கோபம் கொண்டாள் பார்வதி. பிரம்ம தேவனுக்கு ஐந்து தலைகள் இருப்பதால்தானே இந்தக் குழப்பம் என்று எண்ணினாள் பார்வதி. பிரம்மனுடைய ஐந்தாவது தலையை அகற்றிவிடுங்கள் என தனது பதியாகிய சிவபெருமானிடம் முறையிட்டாள் பார்வதி. சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து எறிந்துவிட்டார்.
இந்த செய்தியை அறிந்த சரஸ்வதி தேவிக்கு மிகவும் கோபமேற்பட்டது. இந்த செயலுக்குக் காரணமான இறைவன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மீது அளவிலா கோபம் கொண்டாள்.
ANGALA PARAMESHWARI IN TAMIL | பிரம்மஹத்தி தோஷம் :
‘‘நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீராக’’ என சிவபெருமானுக்குச் சாபமிட்ட சரஸ்வதி ‘‘இதற்கு காரணமான நீ அகோர உருவம் கொண்டு, செடி கொடிகளை அணிந்து கொண்டு பூத கணங்களுடன் காடு மேடெல்லாம் அலைவாயாக’’ என பார்வதிக்கு சாபமிட்டாள். அதன்படி இருவரும் மயானத்திலும் காடுமேடுகளிலும் அலையத் தொடங்கினர். இவர்களுடைய நிலைமையை நன்கு உணர்ந்த மகாவிஷ்ணு அழகிய பெண் வடிவில் மோகினி உருவம் எடுத்து சரஸ்வதியிடம் சென்றார். இவர்களுடைய சாபத்திற்கான சாப விமோசனத்தைப் பற்றி சரஸ்வதியிடம் தெரிந்து கொண்டு அதை இருவரிடமும் தெரிவித்தார். இறைவன் மகாதேவனுடைய பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக பார்வதி தேவியானவள் அங்காள பரமேஸ்வரியாக பூமியில் உருவெடுத்தாள். தேவி மகாலட்சுமியின் உதவியால் பிரம்மாவின் கபாலத்தை தன்னுடைய காலால் மிதித்து அந்த கபாலத்தை தன்னிடமே வைத்துக் கொண்டாள். இதனால் இறைவன் மகாதேவனின் தோஷம் நீங்கியது.
அங்காளபரமேஸ்வரி
உலகம் பிறக்கும் முன் ஒரு நாழி முன் பிறந்தாள்
கலியுகம் பிறக்கும் முன் கால் நாழி முன் பிறந்தாள்
சூரியன் சந்திரன் இல்லாத நாட்டிலே முந்தி பிறந்தாள்
மூவரை ஈன்று எடுத்தாள்,செத்து பிழைத்தாள்,
சிவனுக்கே பாரியானாள்
மாண்டு பிழைத்து மறு ரூபம் ஆனா
மாய சக்தி எங்கள் ஆதி சக்தி
அங்காளபரமேஸ்வரி
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி காயத்ரி
ஓம் ஆதி சக்தி ச வித்மஹே
அங்காளபரமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத். “
ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே
சிவ பத்னிச தீமஹி
தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத்
ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வரூபாயை தீமஹி
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்
அங்காளபரமேஸ்வரி வழிபாடு துதி மந்திரம்
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம்
ஜ்வாலாகேசாம் கராளம் ச தக்ஷிணே நகர குண்டலாம்
வாமகர்ணே பத்ரபூஷாம் ஸர்வாபரண பூஷிதாம்
பாசசூல கபாலோக்ர டங்க ஹேதி விராஜிதாம்
பீதாம்பராம் வ்ருஷாரூடாம் அங்காள பரமேஸ்வரீம்
வந்தே சதுர்புஜாம் உக்ராம் குங்குமாபாம் சுபப்ரதாம்
துதியின் விளக்கம்
ஒற்றை முகமும் நெற்றியில் மூன்று கண்களையும் மேலும் நான்கு கைகளையும் உடையவள்; அக்கினிச் ஜ்வாலையைப் போல சிவந்த கூந்தலை தனது மகுடமாகக் கொண்டவள்; பயங்கரி எனப்படுபவள்; தனது வலது செவியில் முதலை வடிவிலான குண்டலத்தையும், தனது இடது செவியில் தாமரை மலரைப் போன்ற பத்ர குண்டலத்தையும் அணிந்தவள்; எல்லா விதமான அணிகலன்களையும் பூண்டவள்; பாசக் கயிறு, சூலம், கபாலம், உளி அல்லது கோடாரி, ஹேதி என்ற கூர்மையான ஆயுதம் தாங்கியவள்; வெண்பட்டாடை உடுத்தியவள்; காளை மேல் வீற்றிருப்பவள்; குங்குமப்பூ நிறத்தினள்; நலன்களை வழங்குபவள் – ஆகிய அங்காள பரமேஸ்வரியை வணங்குகிறேன்.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோபகவதி
அங்காளபரமேஸ்வரி ஏஹியேஹி
ஸகல சௌபாக்யம் மே தேஹி தேஹி
சகல கார்ய ஸித்திம்
குரு குரு ஓம் நமஹ் ஸ்வாஹா.
ஒவ்வொரு வாரமும் காளி தேவிக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை நாள் அன்று தனது முழு மனதுடன் அங்காளியை வணங்கி மேலே குறிப்பிட்ட சுலோகத்தை 18 முறை கூறி,கோவில் வீட்டில் பானகத்தை நிவேதித்து முழு மனதுடன் வழிபடுங்கள். வாழ்வில் சுபிட்சம் அடைவீர்கள். ஜெய் அங்காளி!!!
அங்காளபரமேஸ்வரி ஸ்லோகம்
ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
இந்த சக்திவாய்ந்த அங்காளி அம்மனுடைய ஸ்லோகத்தை நாள் தோறும் சொல்லி வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துதி
ஓம் சக்தி! ஸ்ரீ அங்காளம்மா!
அங்காளம்மா! ஓம் சக்தி!
அம்மா தாயே! அருள் புரிவாயே!
ஓம் ஓம் சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
ஓம் ஓம் சக்தியே!
ஜெய ஓம் ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
ஜெயமே ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
தாயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அருள் புரிவாய் அம்மா!!!
ஸ்ரீ காளியம்மன் கவசம்:
(எல்லாக் காலங்களையும் வென்றவள் காளி. காளியம்மன், கரால வதனா காளி, உதிரப்பிரியா தேவி, முண்டமாலா தேவி, ஜெயந்தி அம்பாள், பத்ரகாளி தாயே, கபாலினி தேவி, சாமுண்டா தேவி என்று பல திரு நாமங்கள் பத்ரகாளி தேவியினுடைய திருவருளை பெருகச் செய்பவை. காளியை உபாசனை செய்பவர்களுக்கு புனர்ஜென்மம் கிடையாது. பிறப்பை அருக்கும் பெருவாழ்வு தரும் காளி தேவியின் அருள் பெற்ற மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர். உலகம் யாவும் நிரம்பிய புகழைத் தருபவள் அவள். பக்த கோடிகள் மீது பாசமும், கருணையும் கொண்டு அளவற்ற கருணை அருளைச் செய்பவள். கடலைப் போன்றது அவள் அருள். “நீள்கடலாய் நீலவண்ண நீர்மையளாய் தாள்பிடிப்பார் தாபமறத் தாயாகி வந்ததுவும் வாள் பிடித்த காளியவள் வாரிதியாய் வந்திட்டாள்” என்று அவள் புகழ் பேசப்படுகிறது. இந்த காலத்தை வெல்லும் சக்தி படைத்த காளி தேவியைப் பூஜை செய்பவர்கள் அனைவரும் புண்யவான்கள் ஆவார்கள். அவர்களைத் என்றுமே தீமைகள் ஒரு போதும் அணுகாது. இந்த சக்திவாய்ந்த காளி கவசத்தைப் பக்தியுடன் படிப்பவர்களும், படிப்பவர்களின் வாய் மொழி வார்த்தைகளை கேட்பவர்களும், நன்மைகள் பலவற்றை தங்களுடைய வாழ்வினில் பெறுவார்கள் என சிவசார்ய குலபூஷணம் சாம்பமூர்த்தி ஆகிய சிவாசார்யர் கூறுகிறார்.)
ஜெயந்தி மங்களா காளி பத்ரகாளி கபாலினி துர்க்கா
க்ஷமா சிவா தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
காப்பு
மங்களத்தைப் பெருக்கிடவே மலரேறி வந்தவளின்
செங்கமலச் சேவடியைச் சேர்
பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிகொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிவிதியும் ஓடிவிடும் பலவலிமை கூடிவரும்
மதிமலர்ந்த வாக்குவரும் மங்களமே மிக்குவரும்
கவச நூல்
அருள்வீச அம்பிகையே அன்பர்மன இன்னமுதே
இருள் நீக்கு இளவெயிலே இனியசுவை வானமுதே
பொருள்கூட்டு பொன்மணியே பொங்குவரு கங்கையளே
மருள்போக்கு மங்கையளே மங்கையளே காளியம்மா 1
வாழ்வருளும் தேவியளே வானவர்க்கும் தாயவளே
கூழ்விரும்பும் கூளியுடன் கூடிவரும் கூர்மதியே
பாழ்படுத்தும் வைப்பொழித்துப் பாடிவரும் பார்மகளே
வீழ்த்தவரு ஏவலதை: வீசிமிதி வீரியளே 2
என்மனதில் பீடமிட்டு என்னாளும் நின்றிடவே
பொன்னிமயம் விட்டு இன்று பொலிவோடு வந்தவளே
இன்முகத்து எம்மணியே இனியுன்னை விட்டுவிட்டு
பொன்தேடப் போவதிலும் பொருளுண்டோ காளியம்மா 3
காரமிகும் மிளகாயும் காய்ந்த உப்பும் சேர்ந்தபொதி
கால்வழியில் ஒளிந்திருக்க காணாமல் மிதித்துவிட்டேன்
வீரமிகும் காளியம்மா வீதிவழி காத்திடவே
பூரமெனும் ஓரையிலே பூரணையே வந்திடுவாய் 4
இடையூறு போவதற்கே இன்முகத்துக் காளியம்மா
எழுஎட்டுத் திதிவந்து எங்களையே காத்திடுவாய்
கடைபோட்ட மந்திரத்தார் கன்மனத்து ஓதலினால்
உடைபட்டுப் போகாமல் எம்கதியைக் காத்திடுவாய் 5
பதினெட்டுக் கரமுடைய பகவதியே பகவதியே
நிதிசொட்டத் தாமரையில் நிற்கின்ற நித்தியளே
பதிகாக்கச் சிவயநம பலநாளும் செபிப்பவளே
சதிரிட்ட சங்கரியே சண்முகனின் தாயாரே 6
தாயுடனே மக்களையும் தாரமுடன் கணவனையும்
நேயமுடன் ஒன்றாக்கி நேர்வழியில் செல்பவளே
காயாகி கனியாகிக் கானகத்தே நின்றவளே
மாயாவ தாரியென மாநிலத்தில் வந்தவளே 7
வந்திருக்கும் உன்னடியில் வளமான பூவுமிட்டு
சந்தனமும் பூசிடுவேன் சந்தமொடு பாடிடுவேன்
சொந்தமென நீயிருக்க சொக்கிவரும் மூவுலகம்
பந்தமிட்ட தீயொலிகள் பயந்தெங்கோ ஓடிவிடும் 8
ஓடிவிடும் ஓடிவிடும் ஓதிவைத்த மாயமதும்
பாடிவரும் இக்கவசம் பார்முழுதும் காத்திருக்கும்
சூடிவரும் கவசமிதால் சுந்தரியே சொக்கியேன
நாடிநிதம் ஏத்திடுவேன் நாகினியே நாரணியே 9
நாரணனார் முன்னவளே நானேயாய் நின்றவளே
காரணத்தைக் கேளாமல் காத்திடவே வந்தவளே
மாரணமாம் மந்திரத்தால் மாயமிடும் சாம்பலதை
வாரணையாய் கைநீட்டி வையத்தில் சிரிப்பவளே 10
சிரிப்பவருக்கு எரிதீயாய்ச் சினத்தோடு நிற்பவளே
கரிக்கின்ற பேர்களுக்கு கடுகுவெடி முகத்தாளே
தரிக்கின்ற இதயமலர் தங்குகின்ற குணத்தாளே
நரிநகத்துக் குடமாயம் நசியவென நகைப்பவளே 11
நகையாகிப் பாம்பணிந்து நடுவானில் நிற்பவளே
பகைகாண விழிசுற்றிப் பலஉலகம் பார்ப்பவளே
புகைவண்ண மேனியளே புண்ணியமாம் ஞானியளே
தொகைகாண தனமளித்துத் தொழுமுன்னே காப்பவளே 12
காப்பவளும் நீயேதான் கார்த்திகையில் பரணியளே
மாப்பண்டப் படையலுக்கு மாநிதியம் தருபவளே
காப்பணிந்த மஞ்சளொடு காண்பதற்கு வருபவளே
நாப்பணிந்து ஏத்துதற்கு நான்மறையே தந்தவளே 13
கிலிங்கார வித்தெடுத்துக் கிழக்குவயல் விதைத்தவர்க்கு
நலிநீக்கி நல்விளைவை நன்மொழியே தந்திடுவாய்
சௌபாக்ய பீஜத்தில் சௌந்தரத்து நாயகியே
ஸௌஎழுக என எழுப்பும் சௌரியளே சூலியளே 14
துர்க்கையென நிற்பவளே துந்துபியில் மகிழ்பவளே
துயரத்தைத் துடைப்பவளே துணைமகளே ஸ்ரீங்காரி
அர்ச்சனையில் அகமகிழும் அரியவளே ஐம்தேவி
பர்வதத்துப் பனிமகளே பயமோட்டும் கீலீங்காரி 15
கால்வலியும் தலைவலியும் காலத்தின் நோய்வலியும்
மார்வலியும் மாபிணியும் மாயாத தரித்திரமும்
பால்காட்டிப் பாம்புவிடும் பாவையதின் கூத்தடிப்பும்
சேல்விழியே நீவந்தால் சீக்கிரத்தில் ஓடிவிடும் 16
எமைநோக்கித் தீங்கிழைக்க எய்தஒலி கால்நடுங்க
தமைவிட்ட தரித்திரத்தான் தனிவில்லை ஒடித்துவிடும்
உமையென்றும் மறவாத உத்தமர்க்கு மங்களத்தை
உள்ளபடி வட்டியிட்டு உயர்வாக்கி நீ தருவாய் 17
நீ தருவாய் செல்வாக்கு நீள்நிதியம் ஆயுளதை
நீ தருவாய் பெரும்வெற்றி நீங்காத நல்திலகம்
நீ தருவாய் மனவுறுதி நீலிஎழு மந்திரமும்
நீ தருவாய் மஞ்சளுமே நீள்சூலக் காளியம்மா 18
காளியம்மன் கவசத்தைக் காலையில் சொல்லிவரின்
காலபயம் ஏதுமில்லைக் காவலென நின்றிடுவாள்
தூளியெனும் நீறெடுத்து தூபத்தில் அகலுமிட்டு
தூதாக கவசமிட்டால் தூரத்துப் பகையோடும் 19
அட்டமியாம் மாலையில் அவளுக்குப் பூமுடித்து
கட்டத்தைச் சொல்லிவிடின் கருணைக்குப் பஞ்சமில்லை
நட்டவிதை விளைவாக நல்லபதி னொன்றினிலே
தட்டின்றிப் பாடிவரின் தயவுக்கும் பஞ்சமில்லை 20
மங்களத்து வாரமதில் மங்கையர்கள் ஒளியேற்றி
மங்களையைப் பாடிவரின் மங்கல்யம் கூடிவிடும்
செங்கயலின் பூவெடுத்து சென்மஓரை நாளதினில்
நங்கையளின் அடிபணிய நன்மைவரும் தன்மைவரும் 21
பூரணையாம் நாளதனில் பூத்திருக்கும் மல்லியினைக்
காரணிக்குப் போட்டுவரின் காலமெலாம் மணமாகும்
சூரமிகு சூரியனே சூளுரைக்கும் சூலியளே
சாரதையே சாமியளே சாம்பலணி சாம்பவியே 22
மூலமுறை ராசியினில் மூவேளை பாடியிதை
மூலமாம் மந்திரமே முன்பின்னும் ஜெபித்துவரின்
காலத்தால் பஞ்சமது காத்திருந்து சேராது
கோலமாம் குதிரையிலே கோலோச்சி வருபவளே 23
தரிசனத்துத் தேவியளே தருமநிதி தருபவளே
பரிக்கிழத்தி வசியவசி பார்முழுதும் வசியவசி
கரிசேறும் கனகையளே கண்ணான கண்மணியே
கரிகைமண நெற்றியளே கனதனமே தருமகளே 24
காளியம்மா காளியம்மா காணவரும் காளியம்மா
காளியம்மா காளியம்மா காலமெல்லாம் காருமம்மா
காளியம்மா காளியம்மா காளியம்மா வாருமம்மா
காளியம்மா எம்தாயே காளியம்மா காளியம்மா 25
பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிசொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிகிட்டும் வலிகிட்டும் பதிவிதியும் விலகிவிடும்
மதிகிட்டும் மணத்துடனே மங்களமே கூடிவரும் 26
மங்களத்துக் காளியளே மன்னவளே என்நிதியே
மங்களத்துக் காளியளே மணமலரே என்புகழே
மங்களத்துக் காளியளே மங்கலியக் குங்குமமே
மங்களத்துக் காளியளே மதுரமது காளியளே 27
ஓம் க்லீம் ஸ்ரீம் க்லீம் காளி மாகாளி
என் மனத்திலும் முகத்திலும் நிற்கவே ஸ்வாஹா